மேம்பால விபத்து; வடமாநில தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த வடமாநில தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில் மதுரை – நத்தம் பறக்கும் சாலைக்கு கட்டப்படும் மேம்பாலத்துக்கான…

மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த வடமாநில தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மதுரை – நத்தம் பறக்கும் சாலைக்கு கட்டப்படும் மேம்பாலத்துக்கான பணிகளின் போது இணைப்பு பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விபத்தில் உத்தரப் பிரதேச தொழிலாளி ஆகாஷ் உயிரிழந்தார். இதனையடுத்து மேம்பாலம் விபத்து தொடர்பாக அதிமுக, திமுக, மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, கடந்த ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட விபத்துக்களை சுட்டிக்காட்டி இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பாக 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்படும் இந்த பாலத்திற்கான முழு நிதியையும் ஒன்றிய அரசு தான் வழங்குவதாக குறிப்பிட்டார். பளுதூக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாகவே விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்திற்கு பொறியாளர்களின் கவனக்குறைவே முழுக்காரணம் எனவும் அமைச்சர் விளக்கமளித்தார். இந்த விபத்து தொடர்பாக திருச்சி NIT பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் குழு அளிக்கும் அறிக்கையின் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையத்திடம் வலியுறுத்தி இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து, மேம்பால விபத்தில் உயிரிழந்த ஆகாஷ் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.