களக்காட்டில் பெய்த கோடைமழையால் தலையணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனத்துறையினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணை நீா்வீழ்ச்சியில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவிய படி, அதிக குளிர்ச்சியுடன் வருவதால் இதில் குளிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வந்ததால் தலையணையில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. தடுப்பணையை தாண்டி தண்ணீர் விழாததால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். பள்ளங்களில் தேங்கிய தண்ணீரில் குளிக்க முடியாத நிலை நிலவியது.
இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் தலையணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து தடுப்பணையை தாண்டி தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் கவனமுடன் குளிக்கும் படி வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
—-ரூபி.காமராஜ்.







