தமிழ்நாட்டிலேயே பெரிய மதுபானக்கூடம் எது என்றால், அது சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பாமக 2.0 என்ற தலைப்பில் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டிலேயே பெரிய மதுபான கூடம் எது என்றால்,அது சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் தான். திமுக ஆட்சியில் மதுபானம் வெள்ளகாடாக ஓடுகிறது. திமுகவை தோற்றுவித்த அண்ணாவின் கொள்கை பூரண மதுவிலக்கு, அதனை இன்று திமுக ஆட்சி செயல்படுத்துகிறதா?
மதுவினால் வரும் வருமானம் தொழுநோயாளின் கையில் வெண்ணையை கொடுப்பது போல உள்ளது. அதனால் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அண்ணா கூறினார். இந்த ஆண்டு மதுவினால் வரும் வருமானம் ரூ.45,000 கோடி. திமுகவை பொறுத்தவரையில் இது தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி. ஆனால் என்னை பொருத்தவரையில் இது அசிங்கம், அவமானம்.
இந்த ஆண்டு ரூ.45,000 கோடி என்றால் அடுத்தாண்டு ரூ.50,000 கோடியாக வருமானம் வரும். திமுகவின் முதல் வாக்குறுதி முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு தான். இதனை தற்போது திமுக அரசு செய்துள்ளதா?. சட்டமன்றத்தில் அமைச்சர் பேசும்போது தமிழ்நாட்டில் 500 மதுபான கடைகளை மூடப்படும் என்று கூறினார். தற்பொழுது வரை ஒரு மதுக்கடை கூட மூடவில்லை.
ஒரு காலத்தில் 8 மணி நேர வேலையை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என மேடைக்கு மேடை சொன்னார்கள். தற்போது 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றியமைக்கும் சட்டத்தை கொண்டு வருகிறார்கள். இதற்கு முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது குரல் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். இது தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் சட்டமாக மாற்றலாம்.
12 மணிநேர வேலை என்பது மிகவும் மோசமானது, மிகவும் ஆபத்தானது. இந்த சட்டத்தை உடனடியாக முழுமையாக திரும்பப் பெற வேண்டும். நான் இப்போது ஒரு மருத்துவராக பேசுகிறேன். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பை வழங்க வகை செய்யும் சட்டத்தை திமுக அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்த வேண்டும். ஆனால் 15 நாட்கள் தான் தற்போது நடத்துகின்றனர். சபாநாயகர் என்பவர் நடுநிலைமையான ஒருவராக இருக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு 25 சதவீதம், எதிர்க்கட்சியினருக்கு 75 சதவீதமும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் அவ்வாறு நடந்து கொள்ளவதில்லை.
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
- பி.ஜேம்ஸ் லிசா









