வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாகவும், அங்கு நடைபெற்று வந்த தீண்டாமை சம்பவங்கள் தொடர்பாகவும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மற்ற தரப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்து சென்றுள்ளனர். இதையடுத்து நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நீரை குடித்து வந்த அப்பகுதி மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே வேங்கைவயல் கிராமத்தில் உள்ள தேநீர் கடைகளில் இரட்டைக்குவளை முறை கடைபிடிக்கப்படுவதாகவும், கோயிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, பட்டியலின மக்கள் வைக்கும் கோரிக்கைகள் தொடர்பாக ஆர்டிஓ அலுவலகத்தில், ஆர்டிஓ முன்னிலையில் இன்று இரு தரப்பினருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மற்ற தரப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். பட்டியலின மக்கள் கோயிலுக்குள் வருவதை நாங்கள் தடுக்கவில்லை என விளக்கம் அளித்த அவர்கள், எழுத்துப்பூர்வ ஒப்புதலை ஆர்டிஓவிடம் வழங்கினர்.