புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி இரவு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல்நாள் இரவும், புத்தாண்டின் போதும் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ள காவல்துறை, புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டுபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
மேலும் புத்தாண்டின் போது பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குறித்த விவரங்களை காவல்துறைக்கு பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும் எனவும், தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் காவல்துறை உறுதி அளித்துள்ளது.
நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என தெரிவித்துள்ள காவல்துறை, வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு சுமார் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும், வாகனச் சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







