கேரளாவை சேர்ந்த இடைத்தரகர் சுரேஷ் சந்திரசேகர் மீது சிறையில் உள்ள தொழிலதிபர்களை விடுவிப்பதாக கூறி அவர்களின் குடும்பத்தாரிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. தொடர்ந்து தொழிலதிபர் ஒருவரை சிறையில் இருந்து விடுவிப்பதாக கூறி அவரது மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ், முகேஷ் சந்திரசேகரிடம் 7 கோடி மதிப்பிலான ஆடம்பர பரிசு பொருட்களை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இருவரும் காதலர்கள் என்று கூறப்படும் நிலையில் இந்த ஜாக்குலின் பெர்ணாண்டஸையும் இணை குற்றவாளியாக அமலாக்கத்துறை சேர்த்தது.
ஆனால் நடிகையின் தரப்பில், முகேஷ் சந்திரசேகரின் பிண்ணனி தெரியாது என்றும் , சுகேஷ் ஒரு முறையான தொழிலதிபர் என்று நம்பவைத்து தன்னைத் ஏமாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை சார்பில் தனக்கு எதிராகத் தொடங்கிய பணமோசடி நடவடிக்கைகளை ரத்து செய்யக்கூறி வழக்கு முடிவை எதிர்த்து ஜாக்குலின் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அவரின் கோரிக்கையை மறுத்து விட்டது. இதனையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த நிலையில் தற்போது டெல்லி நீதிமன்றத்தில், 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக மாற விரும்புவதாக ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமலாத்துறையிடம் முறைப்படி கோரிக்கை வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.








