”காளி கூட கருப்பு உடைதான்” – பிரதமரின் கிண்டலுக்கு கனிமொழி பதிலடி…!

கருப்பு உடையணிந்தது தொடர்பான பிரதமர் மோடியின் கிண்டலுக்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

மக்களவையில் நேற்று தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தென் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதாக கூறி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் கருப்பு உடையணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.

மசோதாவுக்கு ஆதரவாக 251 பேரும், எதிராக 185 பேரும் வாக்களித்தையடுத்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய பிரதமர் மோடி, “தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது” என்றார். தொடர்ந்து திமுகவினர் கருப்பு நிற உடையணிந்தது பற்றி கிண்டல் செய்த பிரதமர் மோடி, “ஒரு நல்ல காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பு கருப்புத் திலகம்’ இடும் பாரம்பரியம் உள்ளது. அதை செய்துள்ள திமுக வினருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

இந்த நிலையில் இன்று தொடர்ந்த விவாதத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, பிரதமருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது ;ஆளும் கட்சியினருக்கு கருப்பு தெய்வமான காளி நினைவில் இல்லை. பெண் சக்தியை பறைசாற்றும் பெண் தெய்வமான காளியும் கருப்பு உடைதான் அணிந்துள்ளார். அந்த காளிதான் ஈகோ, அராஜகம் போன்றவற்றை விரட்டும் தன்மை கொண்டவர். அத்தகைய கருப்பு வண்ணத்தை நாங்கள் தேர்வு செய்து எதிர்ப்பை பதிவு செய்கிறோம். நாங்கள் கடைசிவரை போராடுவோம்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.