உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழ் நாட்டை சேர்ந்த மோகனா நியமனம் – முதலமைச்சர் விஜய் வாழ்த்து….!

உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் மோகனாவிற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்குறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மோகனாவிற்கு தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக  தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச்  சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.  

உச்ச நீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராகப்பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்களின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாகத் திகழும். மாண்பமை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும்   அவர்களுக்கு என் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.