ஒரே நேரத்தில் அனைத்து வகையான போட்டிகளிலும், வெவ்வேறு இந்திய அணிகளைக் களமிறக்கும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது.
இந்திய எ – நியூசிலாந்து எ அணிகளுக்கு இடையேயான போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்கும் நியூசிலாந்து எ அணி வீரர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்திய எ அணியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல் கூடிய விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. அதன் படி, இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து எ அணி வரும் செப்டம்பர் மாதம் 1-4, 8-11, 15-18 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் 22, 25, 27 ஆகிய தேதிகளில் சென்னையில் 3 ஒருநாள் போட்டிகளிலும் களம் காணத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே இந்திய எ அணியினை இளம் நட்சத்திரமான சுப்மன் கில் தலைமை ஏற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீப காலமாக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில், அனைத்து வகையான போட்டிகளிலும் இடம் பெற்று வரும் சூழலில், இந்தியா எ அணியைத் தலைமை ஏற்கும் வாய்ப்பை பெறுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டும் இன்றி 2021-22 ராஞ்சி கோப்பை போட்டிகளில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் மற்றும் ஷாம்ஸ் முலானி உள்ளிட்டோர், இந்திய எ அணியில், இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மைச் செய்தி: ‘‘மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய வெற்றி’ – தி லெஜண்ட் சரவணன் ட்வீட்’
வருங்காலங்களில் அனைத்து வகையான போட்டிகளையும், ஒரு நேரத்தில் வெவ்வேறு இடங்களில் இந்திய அணி எதிர்கொள்ளும் வகையில், வீரர்கள் தரம் பிரிக்கப்பட்டு, விளையாடும் வகையில் இந்திய அணி உருவாக்கப் படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இந்த போட்டிகள் அதற்கான முதற்கட்ட பரிசோதனையாக இருக்கக்கூடும் என கிரிக்கெட் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
– நந்தா நாகராஜன்








