ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில் பயணம்

மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தை உணராமல் பயணம் செய்வது  குறித்து நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட களஆய்வு நடத்தியது. இதுதொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு தீர்வுகளை முன்வைத்தனர். ‘படியில் பயணம் நொடியில்…

மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தை உணராமல் பயணம் செய்வது  குறித்து நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட களஆய்வு நடத்தியது. இதுதொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு தீர்வுகளை முன்வைத்தனர்.

‘படியில் பயணம் நொடியில் மரணம்’ என்பது போன்ற வாசகங்கள் மூலம் படிகட்டுகளில் பயணம் செய்வது குறித்து எச்சரித்தாலும் மாணவர்கள் தொடர்ந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.

காலை மற்றும் நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கூட்டம், பேருந்தையே கவிழ்த்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்படும் அளவிற்கு நிரம்பி வழிகிறது. ஆபத்தை உணராமல் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுக்களில் பயணிக்க என்ன காரணம், இதனை தவிர்க்க மக்கள் சொல்லும் தீர்வு என்ன என்பதை அறிய தமிழ்நாடு முழுவதும் பிரம்மாண்ட கள ஆய்வை நியூஸ் 7 தமிழ் நடத்தியது.

மதுரை மாநகர் பகுதியில் மட்டும் செயல்படும் 500க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், அவர்கள் வந்து செல்வதற்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருடன் நமது முதன்மை செய்தியாளர் விக்னேஷ் நடத்திய நேர்காணலில், பேருந்துகளில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க, போக்குவரத்துத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் காவல்துறை இணைந்து கூட்டாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையின் படி பள்ளி செல்லும் வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பள்ளி செல்லும் மாணவர்கள் அவர்களின் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் தொடர்பாக ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், பேருந்துகள் மீது ஏறி ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.