திமுக, அதிமுக எனும் திராவிட கட்சிகளை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்துவதே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருப்பவர் தான் தமிழருவி மணியன். இந்த மிஷனை அடைவதற்காக பல்வேறு சாகசங்களை அவர் நிகழ்த்தியுள்ளார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போதே திமுக-அதிமுகவுக்கு எதிராக பாஜக, மதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி சேர அரும்பாடு பட்டார். தனக்கென்று ஒரு சீட்டு கூட வாங்கிக்கொள்ளாமல் திராவிட கட்சிகளை அகற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மட்டும் வைத்துக்கொண்டு அவர் மேற்கொண்ட மிஷன் இம்பாஸிபில் (சாத்தியமாகாமல்) ஆனது. தாங்கொனா துன்பத்துக்கு ஆளனவர் பொறுத்தது போதுமென பொங்கி எழுந்தார். மற்ற கட்சிகளை சார்ந்திருப்பதை விட நாமே களத்தில் குதிக்கலாம் என்று முடிவுக்கு வந்தவர், தன்னுடைய காந்திய மக்கள் இயக்கத்தை, காந்திய மக்கள் கட்சியாக மாற்றி 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிரடியாக குதித்தார்.
குதிப்பதற்கு முன்பே, எங்களுடைய வேட்பாளர்களுக்கு, தொகுதிக்கு குறைந்தது இரண்டாயிரம் வாக்குகள் கூட வழங்கப்படவில்லை என்றால் இந்த அரசியலை விட்டே விலகுவேன் என்று சத்தியம் செய்தார். ஒரு தூய்மையான அரசியல்வாதி என்றும் பாராமல் அந்த 2000 வாக்குகளை கூட வழங்க மறுத்தனர் தமிழக மக்கள். திராவிட கட்சிகளை சம்பவம் செய்ய வந்தவரை, தமிழக மக்கள் சம்பவம் செய்துவிட்டார்களே என்று இணையம் முழுவதும் கேலி செய்யப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இருப்பினும் சொன்ன சொல்லில் இருந்து பின்வாங்காமல் தான் கொடுத்த சத்திய வார்த்தைகளை காப்பாற்றி சரித்திரத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் தமிழருவி மணியன். yes, கல்லில் விதையிட்டு கனியாக்கி சாப்பிட காத்திருப்பதும், பாலில் பயிரிட்டு பசியாற்றிக்கொள்ள துடிப்பதும், தமிழக மக்களிடம் லட்சியத்தை பேசி தேர்தலில் வெற்றி பெற நினைப்பதும் பைத்தியக்காரத்தனம் அல்லவா எனக் கூறி மொத்த பழியையும் தூக்கி மக்களின் மேல் போட்டுவிட்டு அரசியலில் இருந்தே விலகினார். ‘அப்புறம் என்ன உங்க ஹீரோ தோத்துட்டாரா’ என கே.ஜி.எஃப் வசனம் அவரின் ஆதரவாளர்களுக்கு ஒலிக்கத் தொடங்கியது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் கடும் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டார். INTERMISSION(இடைவேளை)
‘END card போட்டு எகத்தாளமா பன்றீங்க, எனக்கு End-ஏ கிடையாது’ என்று வைகைப்புயல் என்றி எண்ட்ரி கொடுப்பார். அது போல மீண்டும் ஒரு மாஸ் எண்ட்ரி கொடுத்தார் தமிழருவி மணியன் . ஆம், ஜல்லிக்கட்டில் தமிழக இளைஞர்களின் போராட்டத்தை கண்டேன், நம்பிக்கை பெற்றேன் எனக்கூறி தன்னுடைய Chapter 2-ஐ தொடங்கினார் தமிழருவி. இதனையடுத்து தன்னுடைய வாழ்நாள் லட்சியத்தை (திராவிட கட்சிகளை ஆட்சியில் இருந்து அகற்றுவது) நிறைவேற்ற அவர் தேர்ந்தெடுத்த லட்சிய மனிதர் தான் ரஜினிகாந்த். ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவிப்பதற்கு முன்பே அவர் அரசியலுக்கு வரவேண்டும், வருவார் என ஊர் ஊராக மேடை போட்டு முழக்கமிட்டார் தமிழருவி. திமுக அதிமுக கட்சிகளை வங்கக் கடலில் கொண்டு போய் கரைத்து, செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் சூப்பர் ஸ்டாரை கொடியேற்ற வைப்பேன் எனவும் போர் முழக்கமிட்டார். அதுமட்டுமா..? இனிமே ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள், தமிழக முதல்வர் என்றே அழையுங்கள் என்று கூறி கர்ஜித்தார்.
இந்நிலையில் தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரபோவதில்லை என்று அறிவித்தார் ரஜினி. காலம் தமிழருவி மணியனின் லட்சியத்தில் கபடி அடிச் சென்றது என்றே பார்க்கப்பட்டது. திராவிட கட்சிகளுக்கு பதிலாக தமிழருவி மணியனின் லட்சியங்கள் தான் வங்கக்கடலில் கரைக்கப்பட்டதாக பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் சினிமா, ஷீட்டிங் என படு பிஸியாக சுழன்று வரும் ரஜினிகாந்தை இன்று சந்தித்து பேசியுள்ளார் தமிழருவி மணியன். இதை பார்த்த அரசியல் சார்பற்ற ரஜினியின் ரசிகர்கள், ‘அய்யய்யோ மீண்டும் மீண்டுமா..!’ எனக்கூறி மீம்ஸ் போட்டு வருகின்றனர்.‘ஆமா இந்த ரெண்டு வரி செய்திக்கு ஏன் இவ்ளோ பெரிய ஹிஸ்ட்ரி’ன்னு நீங்க கேக்கலாம்.. வரலாறு முக்கியம் அமைச்சரே எனும் புலிக்கேசியின் கோட்பாட்டுக்கு இணங்கி இதை சொல்லியாக வேண்டியது நம்முடைய கடமையல்லவா!
- வேல் பிரசாந்த்