பேரறிவாளனுக்கு ஏன் நீதிமன்றமே விடுதலை வழங்க கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ராஜீவ் காந்தி வழக்கில், தன்னை விடுதலை செய்யகோரி பேரறிவாளன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் ஆளுநரின் பதில் முரணாக இருந்ததாக அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு, விடுதலை செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற குழப்பத்திற்கு நடுவில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், ஆளுநர் தமக்கு உள்ள பிரத்யேக அதிகாரம் 161-ன் கீழ் விடுதலை குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவித்தார். அதற்கு ஆளுநர், குடியரசு தலைவர் அதிகாரம் குறித்த விஷயங்களுக்குள் போகாமல், பேரறிவாளனை ஏன் நீதிமன்றமே, விடுதலை செய்ய உத்தரவிட கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பதிலளித்த மத்திய அரசு தரப்பு, இந்த விவகாரத்தில் குடியரசு தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது எனவும், ஆளுநர் செயல்படும் விதம் குறித்து கூட குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.
அண்மைச் செய்தி: ‘ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில் பயணம்’
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ஒவ்வொரு விவகாரத்திலும் அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்காமல், குடியரசு தலைவருக்கு பரிந்துரைப்பது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரான முன்னுதாரணம் என குறிப்பிட்டனர். அப்போது, மாநில அரசின் அமைச்சரவை முடிவுகளை மத்திய அரசு ஆளுநரை கொண்டு எப்போதும் முடக்கிக்கொண்டே இருந்தால், நாட்டின் கூட்டாட்சி அமைப்பே சீர்குலைந்துவிடும் என தமிழ்நாடு அரசு தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க கூடிய விவகாரம், மாநில அரசின் அதிகாரமா?, மத்திய அரசின் அதிகாரமா? அல்லது ஆளுநரின் அதிகாரமா? என்பது குறித்து முதலில் விளக்கப்பட வேண்டும் என மத்திய அரசு தரப்பு தெரிவித்தது. அப்போது பேசிய நீதிபதிகள், பேரறிவாளன் விவகாரத்தில் முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் அரசுக்கு இருக்கிறது என ஏற்கனவே அரசியல் சாசன அமர்வு தெளிவுபடுத்தி விட்டதாகவும், இதில் ஆளுநரை கொண்டு வர வேண்டாம் எனவும் குறிப்பிட்டனர், மேலும், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் எனவும், அமைச்சரவை முடிவு தொடர்பாக அவர் தனித்த கண்ணோட்டத்தோடு செயல்பட முடியாது எனவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து, ஆளுநர் அதிகாரம் தொடர்பான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு குறித்து, ஏதேனும் பதிலளிக்க விரும்பினால் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








