ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் கைது: தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (எஸ்.ஐ.ஆர்) தேர்தல் ஆணையர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார் எழுந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் வலியுறுத்திவந்தனர்.

இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் பல்வேறு அரசியல் கட்சிகளும், AISA, SFI, NSUI உள்ளிட்ட மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களை டெல்லி போலீசார் போராட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே குண்டுக்கட்டாக கைது செய்தனர். மேலும் மாணவர் அமைப்புகளின் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல ஆம் ஆத்மி கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான சௌரப் பரத்வாஜ், சஞ்சீவ் ஜா, அதிஷி மற்றும் சஞ்சய் சிங் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களையும், சில மாணவர் அமைப்புகளின் ஆர்வலர்களையும் டெல்லி காவல்துறை கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.