ஜப்பானின் ஆய்ச்சி – நகோயா மாகாணத்தில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை குவித்து வருகிறது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் இந்திய குத்துச்சண்டை
வீரர், வீராங்கனைகள் 3 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்
மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில், சீனாவின் பாவ் ஸியியை வீழ்த்தி இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம், மேரி கோமுக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற 2வது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை லவ்லினா படைத்தார்.
அதேபோல், மகளிர் 65 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் சீன தைபேயின் சென் நியென்-சின்னை எதிர்கொண்ட இந்தியாவின் பர்வீன் ஹூடா, முதல் சுற்றில் 5 – 0 என முன்னிலை பெற்றார். 2-வது சுற்றில் சென் நியென்-சின் பதிலடி கொடுத்து 5 – 0 என சுற்றை கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில், 3 நடுவர்களின் ஆதரவுடன் 3 – 2 என்ற Split Decision-ல் வெற்றி பெற்று பர்வீன் தங்கத்தை கைப்பற்றினார்.
ஆடவர் குத்துச்சண்டை 80 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் தென் கொரியாவின் கிம் மின்-சியோங்கை 4 – 0 என்ற கணக்கில் வீழ்த்தி அங்குஷ் பங்கால் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அங்குஷ், முதல் இரண்டு சுற்றுகளிலும் முன்னிலை பெற்றதுடன், கடைசி சுற்றிலும் நிதானமாக செயல்பட்டு வெற்றியை உறுதி செய்தார்.




