லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நடிகை மகாலக்ஷ்மி, “இந்தத் திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் சஞ்சய்க்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார்.
கலை இயக்குநர் பெஞ்சமின், “சஞ்சய் ப்ரோ என்ன கதை சொன்னாரோ, அதைத்தான் படமாக்கியிருக்கிறார். நானும் என் பணியைச் சரியாகச் செய்திருக்கிறேன் என நம்புகிறேன். என்னுடைய அணியினருக்கு நன்றி” என்றார்.
நடிகர் அன்புதாசன், “இந்தப் படத்தில் கேஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சஞ்சய் ப்ரோ, லைகா நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி” என்றார்.
நடிகர் ஷிவ் பண்டிட், “கடந்த ஒன்றரை வருடமாக எங்களுடைய உழைப்புக்கு ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த சஞ்சய் ப்ரோ, லைகா நிறுவனத்திற்கு நன்றி” என்றார்.
நடிகை ஃபரியா அப்துல்லா, “ரசிகர்களுடன் படம் பார்த்தது நல்ல அனுபவம். உங்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தமிழ்குமரன், “மிகவும் கஷ்டப்பட்டு சஞ்சய் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இனி, இது உங்களுடைய படம். குடும்பமாக இணைந்து நல்ல படம் கொடுத்திருக்கிறோம் என்ற மனநிறைவு இருக்கிறது. லைகா நிறுவனம் மூலம் சஞ்சயை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்றார்.
இயக்குநர் சஞ்சய், “கடந்த மூன்று வருடங்களாக என்னுடன் பயணம் செய்த லைகா நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் நன்றி. படம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். ‘சிக்மா’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகுதான் நடிப்பா, இயக்கமா என்பதை முடிவு செய்வேன். படம் பார்த்த அம்மா, தங்கை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்தினர்” என்றார்.




