“காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? இந்த நிலைக்கு முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும்.

மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.