ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது இந்தியாவிற்கு மிகப் பெரிய பின்னடைவு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பாஜக கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழக பாஜக
தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற பேராலயங்களில் ஒன்றான பனிமய மாதா
பேராலயத்திற்கு சென்றார். அங்கு அவரை பங்குதந்தை குமாரராஜா வரவேற்றார்.
பின்னர் மெழுகுவர்த்தியை காணிக்கையாக வழங்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிராத்தனை மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது தமிழக பாஜக துணைத் தலைவர் சசிகலா புஷ்பா,மற்றும்
தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சித்தாரங்கன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர்
கலந்து கொண்டனர். பின்ன்ர செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது..
தமிழக முதல்வர் வெளிநாடு செல்வது வரவேற்கத்தக்கது. கடந்த முறை துபாய் சென்று வந்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை திமுக அரசு வெளியிடவில்லை. வெளிநாட்டு முதலீடுகள் குறித்து மாநாடு நடந்த பிறகு பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தின் உரிமைகளில் முதல்வர் தொடர்ச்சியாக விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் அமைச்சர்கள் யாரும் தமிழகத்தில் இல்லை. ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் வருங்காலத்தில் இந்தியாவிற்கு எவ்வளவு பெரிய பாதிப்பு என்று தெரிய வரும். காப்பருக்காக நாம் சீனாவிடம் கைகட்டி கொண்டு நிற்கிறோம். தொலைநோக்கு பார்வை இந்த அரசிற்கு இருப்பதாக தெரியவில்லை” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.







