’இறந்தவர் உடலை பாலியல்ரீதியாக பயன்படுத்தியது குற்றமல்ல’ – கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!

இறந்தவர் உடலை பாலியல்ரீதியாக பயன்படுத்தியது குற்றமல்ல என கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.  கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான ரங்கராஜ் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு இளம்பெண்…

இறந்தவர் உடலை பாலியல்ரீதியாக பயன்படுத்தியது குற்றமல்ல என கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் சர்ச்சை எழுந்துள்ளது. 

கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான ரங்கராஜ் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு இளம்பெண் ஒருவரை கொலை செய்து, இறந்த உடலை பாலியல்ரீதியாக பயன்படுத்தியுள்ளார். இந்த வழக்கு விசாரணை துமகூரு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் குற்றவாளியான ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும், உடலை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து ரங்கராஜ் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் பி.வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஹனுமந்தராய சிஎச், அபிநயா கே, மற்றும் கேவி மனோஜ், பாலியல் வன்முறை தொடர்பாக இந்திய தண்டனை சட்டம் 376ன் கீழ் ரங்கராஜ்-க்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினர்.

இதனையடுத்து, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், “குற்றவாளி இறந்த உடலுடன் உறவு கொண்டுள்ளார். சட்டப்படி ஒருவரின் இறந்த உடலை மனிதராக கருத முடியாது. அதனால் இந்திய தண்டனை சட்டம் 375, 377 (இயற்கைக்கு மாறான உடலுறவு) ஆகியவை குற்றமாக பொருந்தாது. 376வது பிரிவின் கீழ் அது தண்டனை உரிய குற்றம் ஆகாது. இதனால் இறந்து போன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வது குற்றம் ஆகாது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

எனவே ரங்கராஜன் கொலை செய்த குற்றத்திற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை செல்லும் எனவும், இறந்தவர் உடலை பாலியல் ரீதியாக பயன்படுத்திய குற்றத்திற்காக  வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

அத்துடன்,  இறந்துபோன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வதை குற்றம் என்பதை உறுதி செய்யும் புதிய சட்டத்தை கொண்டு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.