பெண்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி சுதந்திர தினவிழாவில் உரையாற்றியுள்ளார்.
78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் டெல்லி செங்கோட்டைக்கு வருகை புரிந்தார். அவரை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். தொடர்ந்து 11வது முறையாக பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி ஆற்றிய உரையில் பேசியதாவது, “இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு படிப்பதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்கின்றனர். இந்தியாவில் புதிதாக 75,000 மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உருவாக்கப்படும். நமது நாட்டிலேயே சிறப்பான கல்வி வழங்கப்பட்டால் மாணவர்கள் வெளிநாடு செல்ல தேவையிருக்காது.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 10 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். விண்வெளித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தனியாரின் செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள் ஏவப்படுகின்றன. நாட்டின் உள்கட்டமைப்பை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
புதிய குற்றவியல் சட்டங்களில் தண்டனையைவிட நீதி கிடைப்பதற்கே முன்னுரிமை அளித்துள்ளோம். 2047ல் வளர்ச்சி அடைய நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். நாட்டு வளர்ச்சிக்கான மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
அனைவருக்கும் சேவை செய்து நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதே 3வது முறையாக பொறுப்பேற்றுள்ள அரசின் பணியாக உள்ளது. இந்தியா 5ஜி சேவையை வேகமாக வழங்கி வருகின்றது. இதனுடன் நின்றுவிடாமல் 6ஜி சேவையை உருவாக்கும் பணி நடைபெற்று வருகின்றது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.







