ஸ்ரீ பெரும்புதூரில் ராமானுஜரின் 1006வது அவதார நாளை முன்னிட்டு, ஸ்ரீ ராமானுஜர் மங்களகிரியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து புத்தாடைகளை ஏற்றுக்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீராமானுஜர் ஆலயத்தில் கடந்த 10 நாட்களாக ஸ்ரீராமானுஜர் அவதாரஉற்சவம் நடைபெற்று வரும் நிலையில் ஸ்ரீராமானுஜரின் 1006வது அவதார நாளை முன்னிட்டு, ஸ்ரீ ராமானுஜர் எண்ணெய் தேய்த்து வாசனை திரவியத்துடன் வீதி உலா வந்து பிறந்த மேனியுடன் சங்குப்பால் நெய்வேத்தியம் செய்து பிறகு அபிஷேகம் செய்யப்பட்டு கண்ணாடி அறைக்கு சென்று ஏகாந்தமாக பக்தி உலாத்தல் செய்தார்.
பிறகு, ஸ்ரீ ராமானுஜரின் அவதார நாளை கொண்டாடும் வகையில் ஸ்ரீ
ராமானுஜர் மங்களகிரி வாகன புறப்பாடு மூலம் தேரடி, காந்தி ரோடு, பஸ் நிலைய சாலை, திருவள்ளூர் சாலை, தோட்டக்காரர் தெரு வழியாக வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த போது, வழி நெடுகிலும் பக்தர்கள் உற்சாகத்துடன் ஸ்ரீ ராமானுஜருக்கு புத்தாடை அணிவித்து சாற்று முறை செய்தனர். மேலும் ஸ்ரீ ராமானுஜரின் வீதி உலாவில் பக்தர்கள் பஜனைப்பாடி மேளதாள வாத்தியங்கள் வாசிக்கப்பட்டு கரகாட்டத்துடன் பெண்கள், ஆண்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான ராமானுஜர் சீடர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராமானுஜரின் அருளை பெற்றுக்கொண்டனர்.
—-ரூபி.காமராஜ்







