இலங்கை அணிக்கு 214 ரன்கள் இலக்கு – அபாரமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ்!

இந்தியாவுக்கு எதிரான சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இலங்கை அணிக்கு 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டி20 உலகக் கோப்பை மற்றும் ஜிம்பாவே தொடரை வெற்றியுடன்…

இந்தியாவுக்கு எதிரான சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இலங்கை அணிக்கு 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை மற்றும் ஜிம்பாவே தொடரை வெற்றியுடன் முடித்துள்ள இந்திய அணி அடுத்ததாக இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இலங்கை அணிக்கு எதிராக 3 டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் இன்று (ஜூலை 27) நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி, இந்திய அணிக்கு யாஜஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி துவக்கம் தந்தனர். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் 16 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்‌ஸர் உட்பட 34 ரன்கள் குவித்த நிலையில், மதுஷனகா பந்தில் ஆட்டமிழந்தார். அதன் அடுத்த ஓவரிலேயே மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர் உட்பட 40 ரன்கள் அடித்து ஹசரங்கா பந்தில் வீழ்ந்தார்.

இதன் மூலம் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதற்கு அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை காட்ட ஆரம்பித்தார். அவர் சந்தித்த 26 பந்துகளிலேயே 58 ரன்கள் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் பத்திரனா வேகத்தில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் 49 ரன்கள் எடுத்த நிலையில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் ஆகியோர் வரிசையாக பத்திரனா பந்தில் வெளியேறினர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் பந்துவீச்சைப் பொறுத்தமட்டில், மதீஷா பத்திரனா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.