மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! முதல் நாளே முடங்கியது நாடாளுமன்றம்!

மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில்…

மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்துக்கு முன்பாக நிறைவுபெறும். அதேபோல் இந்த ஆண்டு நடைபெறும் 17-வது நாடாளுமன்றத்தின் 12-வது (மழைக்காலக் கூட்டம்) அமா்வு இன்றுதொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தொடா் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 17 அமா்வுகளுக்கான இந்த கூட்டத் தொடரில் விவாதித்து நிறைவேற்ற மொத்தம் 28 மசோதாக்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளன. இதில் 21 மசோதாக்கள் இரு அவையிலும் புதிதாத அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு மழைகால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை,  மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களை கொண்டு ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட அரசுகள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.

மேலும் விலைவாசி உயர்வு, மற்றும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை குறித்த பிரச்னைகளை எழுப்புவது, அதேபோல் டெல்லி அவசர சட்டத்தை எதிர்ப்பது பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் தயாராக இருந்தன.

இந்நிலையில், மணிப்பூர் கலவரத்தில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக அழைத்துச் செல்லும் காணொலி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை என எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாளே நாடாளுமன்றத்தில் அனல் பறந்தது. இதனை அடுத்து எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.