தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றிட 16,540 சிறப்புப் பேருந்துகளும், திரும்பி வர 17,719 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி தீபாவளிக்கு சென்று வர அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20 ஆயிரத்து 371 பேருந்துகளில், விபத்து மற்றும் பெரும் பழுது உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 37 பேருந்துகளை தவிர்த்து, மீதமுள்ள 20,334 பேருந்துகளும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த மாதம் துவங்கப்பட்ட இணையதள முன்பதிவு வாயிலாக இதுவரையில் 72,597 நபர்கள் முன்பதிவு செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
பயணிகள் தங்களின் வசதியான பயணத்திற்கு முன்பதிவு செய்து கொண்டு பயணிக்குமாறும், கோயம்பேடு மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில், சிறப்புப் பேருந்துகளை இயக்க தனது தலைமையில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பதனைத் தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வரும் 01/11/2021 முதல் 03/11/2021 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,506 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 9,806 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,540 பேருந்துகள் இயக்கப்படும் எனவும், தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் 05/11/2021 முதல் 08/11/2021 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,319 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,000 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,719 பேருந்துகளும் இயக்கப்படுமென போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.







