பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று காலை அடக்கம் செய்யப்பட்டது.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் புனித் ராஜ்குமார் (46). இவர் நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளையமகன். அவரது மரணம், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்திய திரை உலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் உட்பட பலர் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
பெங்களூரு சதாசிவநகரில் உள்ள அவர் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்ட உடல், பின்னர், கன்டீரவா மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்பட அமைச்சர்கள் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர்., ஸ்ரீகாந்த், தமிழ் நடிகர்கள் சரத்குமார், அர்ஜூன், பிரபுதேவா, நடிகைகள் ரம்யா, சுமலதா எம்.பி., தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட பல்வேறு நடிகர்-நடிகைகளும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ரசிகர்களும் வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் திரண்டதால், கன்டீரவா மைதானத்தில் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தினரை ஒழுங்குப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.
இந்நிலையில் இன்று காலை, புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவர் பெற்றோர் நினைவிடம் அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.









