தாமிரபரணி -நம்பியாறு -கருமேனியாறு இணைப்புத் திட்டத்தின் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்த ஆறுகள் இணைப்பு திட்டத்தின் நான்காம் கட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு இன்று ஆய்வு செய்தார். நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி, பெருமாள் நகர், முனைஞ்சிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அவர், பணிகளை விரைந்து முடிக்கவும் பணிகளில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, 2008-09 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திட்டத்தை விரைந்து முடிக்க அறிவுறுத்தி யுள்ளதாகவும் தெரிவித்தார். நான்காம் கட்ட பணிகளில் நான்கு வழிச்சாலையின் குறுக்கே பாலமும் ரயில்வே பாலமும் அமைக்கப்பட இருப்பதாகவும் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்புத் திட்டத்தின் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக பணிகள் நிறைவு பெற்று விவசாயிகள் பயன்படும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் பொதுப்பணித்துறை, ரயில்வேதுறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.