ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருவதைக் கண்டித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முதலில் 25 சதவிகித வரியையும் பின்னர் கூடுதலாக 25 சதவிகித அபராத வரியையும் விதித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்தியா மீண்டும் ரஷிய எண்ணெயை வாங்கினால் வரிகள் விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா மீது 50%ஆக இருந்த வரி தற்போது 18% குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையும் வெளியானது. இடைக்கால ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையை அமெரிக்கா சார்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “இந்தியாவில் இருந்து 30 டிரில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதிக்கு வழிவகுக்கும். மேலும், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 18 சதவீத இறக்குமதி வரி விதிக்கும். அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் தானியக் கழிவுகள், கால்நடை தீவனங்களுக்கு வரிகுறைப்பு. அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் விவசாயப் பொருட்களுக்கான வரியும் குறைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 500 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவிலிருந்து எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருள்களை இறக்குமதி செய்யவும் இந்தியா ஒப்புதல் அளித்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.







