இந்திய சினிமாவின் தென்னிந்திய ராணி என அழைக்கப்படும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் இன்று அகவை 40-ல் அடியெடுத்து வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக அறியப்படுபவர் நடிகை த்ரிஷா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் நடித்து வருகிறார். 1999-ம் ஆண்டு தமிழில் வெளியான ”ஜோடி” படத்தில் சிம்ரனுக்கு நண்பராக நடித்தார். 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியின் “பியூட்டி ஃபுல் ஸ்மைல்” விருதை நடிகை த்ரிஷா வென்றார்.
இதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கி சூர்யா நடித்த மௌனம் பேசியதே திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த திரைப்படம் நடிகை த்ரிஷாவுக்கு திரையுலகில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இதன் பின்னர் விக்ரமுக்கு ஜோடியாக சாமி, விஜய்க்கு ஜோடியாக கில்லி, சூர்யாவுக்கு ஜோடியாக ஆறு நடிகர் அஜித்திற்கு ஜோடியாக கிரீடம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார். ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த “உனக்கும் எனக்கும்” படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்தது.
தமிழ் திரைப்படத்தின் முக்கிய நட்சத்திரங்களான நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் பேட்ட மற்றும் மன்மதன் அம்பு ஆகிய படங்களில் நடித்துள்ளார். கமர்ஷியல் படங்களில் மட்டுமல்ல நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் தேர்வு செய்து நடித்துள்ளார். ராதா மோகன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜுக்கு மகளாக நடித்த அபியும் நானும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விண்னைத் தாண்டி வருவாயா படத்தில் சிம்பு-த்ரிஷா ஜோடியை சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்
த்ரிஷாவின் திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படமாக ”96” படம் அமைந்தது. இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி த்ரிஷா நடித்த இப்படம் ஒரு சிறந்த காதல் திரைப்படமாக மிகப் பெரிய வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் சமீபகாலமாக Women Centric படங்கள் அதிக அளவில் வெளியாகி வருகின்றன.
நடிகை த்ரிஷா பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தும் படங்களை தேர்வு செய்து சமீபகாலமாக நடித்து வருகிறார். இதன் படி அவர் நடித்த ராங்கி, கொடி ஆகிய படங்கள் த்ரிஷாவின் சினிமா பயணத்தில் வித்தியாசமானவை. இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த கதாபாத்திரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் வெளியாகி த்ரிஷாவுக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. பொன்னியின் செல்வன் பாகம் 1ன் வெற்றியை தொடர்ந்து பாகம் 2ம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் த்ரிஷாவுக்கு அழுத்தமான கேரக்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
த்ரிஷா அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ”லியோ” என்ற படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார். விஜய்-த்ரிஷா காம்போ தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய்யுடன் மீண்டும் த்ரிஷா இணைந்துள்ளார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் கதாநாயகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி 20 ஆண்டுகளை கடந்த பின்னரும் இன்னும் முன்னணி நடிகையாக நடிகை த்ரிஷா வலம் வருகிறார் . இந்த நிலையில் 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். த்ரிஷாவிற்கு ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து மழைகளை பொழிந்துவருகின்றனர். அவரது புகைப்படங்களும் வீடியோக்களும் வலைதளங்கள் முழுவதும் பரவி வருகின்றன.







