சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா: முதல்வர் விஜய் பங்கேற்பு!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொண்டுள்ளார்.

டெல்லியில் உள்ள ஐடிசி மௌரியா நட்சத்திர விடுதியில் சோனியா காந்தி எழுதியுள்ள ‘Belonging: A Journey of Love’ என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் கலந்துகொண்டுள்ளார்.

விழாவில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. விழாவில் முதல் வரிசையில் ராகுல் காந்திக்கு அருகில் முதல்வர் விஜய் அமர்ந்திருந்தார். முன்னதாக, நிகழ்ச்சிக்கு வந்த அவரை பிரியங்கா காந்தி வரவேற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.