நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் விஜய் பாலாஜி கைத்தறி மற்றும் துணிநூல் தொழில் துறைகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டார். இந்த நிலையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் கீழ்க்கண்ட அறிவிப்புகளை கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் (Handloom Support Programme) செயல்படுத்த மொத்தம் ரூ.11.7922 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன:
- இளம் தொழில் முனைவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆண்டுதோறும் தலா ரூ.25 இலட்சம் என 10 புதிய தொழில் முனைவோர்களுக்கு ரூ.2.50 கோடி மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு.
- கைத்தறித் துறையின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும் எதிர்காலத் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்ல பாரம்பரியமான நெசவாளர் கூட்டுறவுச் சங்க கட்டிடங்களைப் புதுப்பிக்கும் நோக்கத்தோடு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு.
- உலகப்புகழ் பெற்ற பட்டு கைத்தறி தயாரிப்புகளின் தரத்தையும். சர்வதேச சந்தைக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும் நோக்கில் காஞ்சிபுரத்தில் பட்டு ஏற்றுமதி வர்த்தக மையம் ஒன்றினை ரூ.2 கோடி செலவில் அமைத்தல்.
- 1,000 தனிநபர் தறிக்கூடங்களில் சூரிய ஒளி மின்தகடுகள் அமைக்க கைத்தறி நெசவாளர்களுக்கு சூரிய ஒளி மின்சார வசதி ஏற்படுத்த 100 விழுக்காடு மானியம்.
- பட்டு இரகங்களின் வடிவமைப்புத் திறனை மேம்படுத்தவும், புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும் தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் நவீன வடிவமைப்பு நிலையம்.
- கைத்தறி இரகங்கள் மற்றும் பிற கைத்தறிப் பொருட்களின் விற்பனையை மேம்படுத்தும் வகையில் ரூ.1 கோடி திட்ட மதிப்பீட்டில் கன்னியாகுமரி மாவட்டம். நாகர்கோவிலில் நவீன விற்பனை வளாகம்.
- தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் புகழ்மிக்க கைத்தறி இரகங்கள் மற்றும் வீட்டு உபயோக ஜவுளி இரகங்களை தேசிய அளவில் பிரபலப்படுத்தி, விற்பனையை மேம்படுத்தும் நோக்கில் கைத்தறிக் கண்காட்சிகள் நடத்த ரூ.2.55 கோடி நிதி ஒதுக்கீடு.
- நெசவாளர்களும், கைத்தறி கூட்டுறவுச் சங்கங்களும் துறை சார்ந்த சேவைகளை எளிதாகப் பெறும் வகையில் நிர்வாக வசதிக்காக திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் ஆரணிக்கு இடமாற்றம்.
அரசாணைகளின்படி கைத்தறித் தொழிலின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், நெசவாளர்களின் நலனைப் பாதுகாத்தல், கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகளை வலுப்படுத்துதல் மற்றும் கைத்தறித் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்தல் ஆகிய நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதுடன். தமிழ்நாட்டின் பாரம்பரிய கைத்தறித் தொழிலைப் பாதுகாத்து நெசவாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதோடு, கைத்தறித் துறையை நவீனமயமாக்கி அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல இயலும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.




