சென்னை – செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் நடைபெற உள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நவம்பர் 17, 20, 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை – விழுப்புரம் வழித்தடத்தில் காலை 11.40 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை ரயில் பாதை மற்றும் மின்சாரத் தடைக்காலப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நவம்பர் 17 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.48 மற்றும் பிற்பகல் 12.30 மணிக்குப் புறப்படும் ரயில்கள், சிங்கப்பெருமாள்கோவில் – செங்கல்பட்டு இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகின்றன.
செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரைக்குப் புறப்படும் பிற்பகல் 1.05 மற்றும் 3 மணிக்கான ரயில்களும் செங்கல்பட்டு – சிங்கப்பெருமாள்கோவில் இடையே இயக்கப்படாது.
நவம்பர் 20 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் பல மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள்கோவில் அல்லது காட்டாங்குளத்தூர் – செங்கல்பட்டு இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகின்றன.
செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரைக்குச் செல்லும் குறிப்பிட்ட ரயில்களும் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், நவம்பர் 20 மற்றும் 24 ஆகிய தேதிகளில் திருவாலங்காட்டிலிருந்து காலை 11.05 மணிக்குப் புறப்படும் சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் (ரயில் எண் 40804), சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் செங்கல்பட்டு மின்சார ரயில் (ரயில் எண் 40901) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பயணிகள் இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.




