இந்தி மொழி மட்டுமே என்று சொல்வதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் உள்ள கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் முத்தமிழ் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளை பார்த்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, “இந்தி மொழி மட்டுமே என்று சொல்வதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய நாட்டை பொறுத்த வரை அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இந்தி ஆட்சி மொழி என்பதை போல். ஆங்கிலமும் ஆட்சி மொழி என்பதை தொடர்ந்து பின்பற்றிட வேண்டும். இந்தி என்பது இந்த நாட்டில் இருக்கின்ற பல்வேறு மொழிகளில் ஒன்று. அது ஒன்றினை மட்டுமே மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள இயலாது” என்று தெரிவித்தார்.
பல மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் உள்ளடங்கிய இந்திய நாட்டில் அந்தந்த மொழிக்கு ஒர் முக்கியத்துவம் கிடைக்கும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருந்திட வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்சி மொழி சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது என்று சுட்டிக்காட்டிய திருச்சி சிவா, “ஆங்கிலத்தை அகற்றி விட்டு இந்தி மட்டுமே என்ற நிலையை ஒன்றிய அரசோ, வேறு அமைப்போ மேற்கொள்ளுமானால் அதனை எல்லா வகையிலும் போராடி தடுத்து நிறுத்தி ஆங்கிலம் தொடர்ந்திடுவதற்காக எல்லா முயற்சிகளையும் திமுக எடுக்கும்” என்று குறிப்பிட்டார்.
பாஜகவில் உங்கள் மகன் இணைந்துள்ளாரே என்ற கேள்விக்கு பதில் எதுவும் கூறாமல் சென்று விட்டார்.