சிறுமியாக இருக்கும்போது திருமணம் செய்து கொண்டாலும் தற்போது இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதால் அதனை கருத்தில் கொண்டு போக்சோ குற்றவாளிக்கு எதிரான சிறை தண்டனையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது உறவினரின் மகளான 14 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக சேர்ந்து வாழ்ந்துள்ளார். இதன் காரணமாக அச்சிறுமி தனது 15 வயதிலும், 17 வயதிலும் குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் தண்டபாணி அவரை திருமணம் செய்துள்ளார்.
இதற்கிடையே தண்டபாணியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்கிறது. இதை எதிர்த்து தண்டபாணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது, தமிழக காவல்துறை தரப்பில், “தண்டபாணி மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருக்கான தண்டனையை குறைத்தால் அது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடாது, எனவே இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்ய வேண்டும்” என கோரப்பட்டது.
அதேவேளையில், மனுதாரர் தரப்பில், “தண்டபாணியால் பாதிக்கப்பட்ட பெண் 18 வயதைக் கடந்து விட்டார். அவரது கணவரான தண்டபாணியுடன் மகிழ்ச்சியாக உள்ளார்.அது தொடர்பான திருப்பூர் கீழமை நீதிமன்ற நீதிபதியின் அறிக்கையையும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளது” என வாதிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துள்ள தண்டபாணி தினக்கூலி என்றும் அவரின் சிறை தண்டனை உறுதி செய்யப்படும் பட்சத்தில், இளம் பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் கடும் பாதிப்படைவர் எனவே அவரை விடுவிக்க வேண்டும் என கோரப்பட்டது. 
இதனையடுத்து, கீழமை நீதிமன்ற நீதிபதியின் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், தண்டபாணி செய்தது தவறு என்றாலும், தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுடனான திருமண வாழ்க்கை சுமூகமாகவும் மகிழ்ச்சியாகவும் சென்று கொண்டிருப்பதாக கூறியிருப்பதால் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தில் பிரச்னையை உருவாக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டனர்.
இந்த வழக்கில் தண்டபாணிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரமான பிரிவு-142ஐ பயன்படுத்தி ரத்து செய்வதாக தெரிவித்த நீதிபதிகள், “சம்பந்தப்பட்ட பெண்ணை தண்டபாணி நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த இளம்பெண்ணோ, தமிழக காவல்துறையோ இந்த நீதிமன்றத்தை நாடினால் அவரது தண்டனையை ரத்துசெய்து தீர்ப்பு மாற்றி அமைக்கப்படும்” என்று உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.







