கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இயக்குநர்கள், ஷங்கர், ஏ.ஆர்.முருகதஸ், வெற்றிமாறன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, உள்ளிட்டோர் நிதியுதவி அளித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு, பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதற்கிடையே, நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்கள், வெளிநாடுவாழ் தமிழர்களிடம் தாராளமாக நிதி அளிக்கும்படி கோரிக்கை வைத்தார்.
அவர் கோரிக்கையை ஏற்று தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகள், கட்சித் தலைவர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை நிதியுதவி வழங்கி வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்தவர்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாயும் ஜெயம் ரவி, இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன் உள்ளிட்டோர் தலா 10 லட்சம் ரூபாயும் நிதியுதவி அளித்துள்ளனர். முன்னதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.25 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறார்.







