“அய்யா நீங்க நெனச்சா என்ன காப்பாத்தலாம்” – சிறுநீரகம் செயலிழந்த சிறுவன் முதலமைச்சருக்கு கோரிக்கை!

விருதுநகரில் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் தன்னை காப்பாற்றும்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கும் சிறுவனின் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் அப்துல் மஜித்.…

விருதுநகரில் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் தன்னை காப்பாற்றும்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கும் சிறுவனின் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் அப்துல் மஜித். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராபியா பேகம். இவர்களின் மகன் அசாரூதின் (14). அசாரூதின் விருதுநகரில் உள்ள தனியார் நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

அசாருதீனுக்கு ஒரு வயதிலிருந்து அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து உள்ளன. இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே அசாருதீனுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அந்த சிறுவனுக்கு தற்போது கல்லீரலும் பாதிக்கப்பட்டு உள்ளதால் உடனடியாக சிறுநீரக மாற்று மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சிறுவனின் தாய், தந்தை இருவரும் கூலி வேலை செய்வதால் பல லட்சங்கள் செலவு செய்து தன்னுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் உள்ளதால், தற்போது அந்த சிறுவன் முதலமைச்சரிடம் உதவி கேட்டு பேசும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் தங்களுடைய குழந்தையை காப்பாற்றித் தருமாறு அந்த சிறுவனின் பெற்றோர் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.