வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
டெல்லியில் நேற்று இந்தியா கூட்டணீ சார்பில் மாதிரு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும் எஸ்ஐஆர் நடவடிக்கையைக் கண்டித்தும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
பிர்பகல் 12 மணியளவில் மிண்டோ சாலை – கோனாட் பிளேஸ் சந்திப்பில் தொடங்கி ராம்லீலா திடல் வரை பேரணி நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சிபிஐ(எம்) அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், , “நாங்கள் நரேந்திர மோடியையோ, அமித் ஷாவையோ அல்லது ஞானேஷ் குமாரையோ வெறுப்பதில்லை. நாங்கள் வெறுப்பை அல்ல, அன்பை விதைப்பவர்கள், அகிம்சையைப் பின்பற்றுபவர்கள். என்னைப் பொறுத்தவரை, எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் குரலும் எனக்கு மிக முக்கியமானது. அது மதத்தை விடவும் மேலானது, அதுவே எனது மதம், நாங்கள் வன்முறையை நாடமாட்டோம், யாருக்கும் தீங்கு விளைவிக்கமாட்டோம். வெறுப்பைப் பரப்பவும் மாட்டோம். அதே சமயம், அரசியலமைப்பைச் சிதைக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்ன நடந்தாலும் சரி, அதை நாங்கள் ஒருபோதும் நடக்க விடமாட்டோம்.
நான் உங்களிடம் சொல்கிறேன் பாவம், ஞானேஷ் குமாரால் இரவில் தூங்க முடியவில்லை. அவர் பயந்துபோய், இரவில் தூங்க முடியாமல் தவிப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், அவர் செய்திருப்பது மிகப்பெரிய குற்றம்; தேசத்தின் குரலையும் ஆன்மாவையும் ஒடுக்க அவர் முயன்றுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டம் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கோ அல்லது தலைவருக்கோ உரியது அல்ல; இது ஒரு கூட்டுப் போராட்டம்; இது இந்தியாவின் போராட்டம், இந்தியாவின் குரல்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பது மற்றும் நீக்குவது ஆகியவற்றின் மூலம் ஜனநாயகக் படுகொலை செய்யப்படுகிறது. மத்தியப் பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலுமே முறைகேடுகள் மற்றும் ‘வாக்குத் திருட்டு’ நடைபெற்றுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாகவும், வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்களின் பெயர்களைத் திட்டமிட்டு நீக்கியும், போலி பெயர்களைச் சேர்த்தும் இந்த வாக்குத் திருட்டு அரங்கேற்றப்பட்டு வருகிறது. தகுதியான இந்தியக் குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பதும், வாக்காளர் பட்டியலைத் திருத்துவதும் வெறும் தேர்தல் முறைகேடு மட்டுமல்ல, அது “தேசத்துரோகம்”மற்றும் நாட்டின் ஆன்மாவின் மீதான தாக்குதல். தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாதுகாக்கவும், வாக்காளர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு போராடும்” என்று தெரிவித்தார்.




