தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதவில், “பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பொருளாதாரக் கொள்கைகளால், அக்டோபர் மாதத்தில் நாடு தழுவிய ஜிஎஸ்டி வசூல் ரூ.2.3 லட்சம் கோடியைத் தாண்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆனால், விஜய் தலைமையிலான தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையால், தமிழகத்தின் ஜிஎஸ்டி வளர்ச்சி தேசிய சராசரியை விடக் கடுமையாகச் சரிந்து, வெறும் 3%-ஆக முடங்கிக் கிடப்பது தமிழகத்திற்குப் பெரும் பின்னடைவாகும்!
ஒரு காலத்தில் தொழில் உற்பத்தியிலும் ஜிஎஸ்டி பங்களிப்பிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்த தமிழகத்தை, தவெக அரசு தனது ஆட்சிக் காலத்தில் அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ளது. பின்தங்கிய மாநிலமாகக் கூறப்பட்ட உத்தரப் பிரதேசம் 24% வளர்ச்சியையும், அண்டை மாநிலங்களான ஆந்திரா 24% மற்றும் கேரளா 23% எனப் பல மாநிலங்கள் இரட்டை இலக்க ஜிஎஸ்டி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஆனால், தமிழகத்திலோ கடந்த மூன்று மாதங்களில் வரி வளர்ச்சி -5% வரை வீழ்ச்சியடைந்திருப்பது இந்த அரசாங்கத்தின் திறனற்ற நிர்வாகத்தை காட்டுகிறது.
தமிழகத்தில் ஜிஎஸ்டி வளர்ச்சி வெறும் 3 சதவீதமாகச் சரிந்ததற்கு, மாநிலத்தின் முதுகெலும்பான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடிகளே முக்கியக் காரணம். தவெக அரசின் தெளிவற்ற தொழில்துறைக் கொள்கைகள், அரசு அனுமதிகளில் நிலவும் காலதாமதம் மற்றும் வணிகர்களுக்கான ஆதரவின்மை ஆகியவை உற்பத்திச் சூழலை முடக்கியுள்ளன. இத்துடன், புதிய முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்வதும், உள்கட்டமைப்பை மேம்படுத்தாத நிர்வாக மெத்தனமுமே தமிழகத்தைப் பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளியுள்ளன.
இந்த அவல நிலையை மாற்ற, நலிவடைந்து வரும் குறு, சிறு தொழில்களுக்கு உடனடி நிதி ஆதரவும் வரிச் சலுகைகளும் வழங்குவதோடு, தொழில் தொடங்குவதை எளிதாக்கும் ‘ஒற்றைச் சாளர’ (Single Window) அனுமதி முறையைத் தீவிரப்படுத்த வேண்டும். மேலும் உலக முதலீட்டாளர்களைத் தக்கவைக்கும் வகையிலான கவர்ச்சிகரமான முதலீட்டுக் கொள்கைகளை வகுப்பதுமே இதற்கான நிரந்தரத் தீர்வாகும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




