தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 88. ஜானகியின் உடல் மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பாடகி ஜானகிக்கு பிரதமர் மோடி, எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இளையராஜா, பார்த்திபன், திரிஷா, வைரமுத்து உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவித்தார்.
அதன்படி பழம்பெரும் பாடகி ஜானகியின் உடல் மைசூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கர்நாடக காவல்துறை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.




