‘2031-லும் ஒரு மிகப்பெரிய ஆட்சி மாற்றம்’ – அண்ணாமலை பேச்சு…!

மக்கள் 2031 -லும் ஒரு மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை உருவக்குவார்கள் என்று வி த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

பொள்ளாச்சியில் ‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. போதையில்ல தமிழ் நாடு என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

வீ த லீடர்ஸ்’ இயக்கத்தில் 38 நாட்களில் 19 லட்சத்திற்கும் மேல் மக்கள் இணைந்துள்ளனர். நான் யாரிடமும் வந்து இணையுங்கள் என்று சொல்லவில்லை. ஏனென்றால் இந்த அமைப்பு குடும்ப கட்சி கிடையாது. இது எனக்கு சொந்தமானது அல்ல, உங்களுக்கு சொந்தமானது. யாரையும் நான் கூப்பிடப்போவது கிடையாது நீங்களும் கூப்பிடாதீர்கள். நம் வேலையை பார்த்து மக்கள் நம்மிடம் வர வேண்டும். வீ த லீடர்ஸ் குடும்பத்தில் 50 லட்சம் என்ற எண் வரும்போது, தமிழ்நாட்டு மக்கள் நம்மை அழைக்கிறார்கள் என்று பொருள்.

எந்த அழைப்பும் இல்லாமல் இத்தனை பேர் தன்னெழுச்சியாக வருவார்கள் என்பதை பொள்ளாச்சி பார்த்திருக்கிறது. ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு என்பது இளம் அமைப்பு. இந்த அமைப்பில் 39 வயதுக்கு கீழ் 54 % பேர் இருக்கிறார்கள். அவர்கள் குரலை கேட்க வேண்டும். அவர்களின் எண்ண ஓட்டம் வித்தியாசமானது. உடனடியாக மாற்றம் வேண்டும் என நினைக்கிறார்கள். 39 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் தான் 2026ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தார்கள். 2031-லும் ஒரு மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

தவெக ஆட்சி வந்த பிறகு, ‘ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை? ரெண்டு வெளு வெளுத்து விடுங்கள்’ என்று நிறைய பேர் சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்; 2026 தேர்தலில் ஒரு கோடியே 68 லட்சம் பேர் வாக்களித்து அந்தக் கட்சியை தேர்வு செய்திருக்கிறார்கள். அதற்கு மரியாதை கொடுப்பது நமது கடமை. தவெகவில் இருப்பவர்கள் அனைவரும் முதல் முறை அமைச்சர்களாகவும், முதல் முறை எம்.எல்.ஏ.க்களாகவும் இருக்கிறார்கள் அமைச்சர் செங்கோட்டையனை தவிர. அதனால் கொஞ்சம் தடுமாறுவது இயல்பு. அப்படி தடுமாறுபவர்களை ஒரு நல்ல சமுதாயம் தூக்கிவிட வேண்டுமே தவிர கீழே அழுத்தக்கூடாது. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

முதலமைச்சர் வழிபாட்டு ஆலயங்களாக இருக்கட்டும், கல்லூரிகளாக இருக்கட்டும் அங்கிருந்து 500 மீட்டருக்குள் 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதாக ஒரு உத்தரவு போடுகிறார். நாம் செய்த கள ஆய்வில் இன்னும் டாஸ்மாக்குகள் நூற்றுக்கணக்கான 500 மீட்டருக்குள் உள்ளது.

பாஜகவின் B டீமா அண்ணாமலை? என்று சில திமுக நண்பர்களுக்கு சந்தேகம் உள்ளது. ‘இந்நேரம் மோடியை திட்டி இருந்தா, மற்றவர்கள் எல்லாம் வந்திருப்பர்கள். ஏன் திட்டாமல் இருக்காரு?’ன்னு நினைக்கிறாங்க.

இறுமாப்போடு சொல்கிறேன். நான் ஒரு தேசியவாதி. இந்தியன் என்பதில் எப்போதும் எனக்கு ஒரு கர்வம் உள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம்.

நான் ஒரு இந்து. வீட்டில் இருந்து வரும்போது சாதியையும் மதத்தையும் பூட்டி வைத்துவிட்டு சாமானிய மனிதனாக பொதுவான மனிதனாக உங்கள் முன் நிற்கிறேன். மதத்தை தூக்கி பிடித்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான இந்து அனைவரையும் சமமாக பார்ப்பான். இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.