ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் போக்கு உண்டாகியுள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று 11 இந்திய மாலுமிகளுடன் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கப்பலில் பயணித்த 11 இந்திய மாலுமிகளில் ஒருவர் மாயமான நிலையில் 10 பேர் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மாயமான ஒரு இந்தியரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “ஓமன் கடற்கரைப் பகுதியில் இன்று வணிகக் கப்பலான ‘ஜிஎஃப்எஸ் கேலக்ஸி’ (GFS Galaxy) மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். அக் கப்பலில் இருந்த 11 இந்தியக் குடிமக்களில் 10 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்; ஒருவர் காணாமல் போனதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஓமனில் உள்ள நமது தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதுடன், நடைபெற்று வரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஓமன் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஓமன் அதிகாரிகளின் ஒத்துழைப்பிற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.
இப்பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கின்றன. பதற்றத்தைத் தணிக்கவும், இப்பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் வகையில் இராஜதந்திரத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்யவும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இப்பகுதியில் வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்; அத்துடன், சர்வதேசச் சட்டங்களுக்கு இணங்க, இப்பகுதியிலுள்ள சர்வதேச நீர்வழிகள் வழியாகத் தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் ஆகியவை மிக விரைவில் மீட்டமைக்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




