முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த சிவஷங்கர் பாபா சென்னை அழைத்துவரப்பட்டார்!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து தனிப்படை அமைத்து தலைமறைவான சிவசங்கர் பாபாவை தேடிய சிபிசிஐடி போலீசார், டெல்லியில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர்.

பின்னர், டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவை தமிழ்நாட்டுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்துவதற்கான வாரண்டை நீதிபதி விபுல் சந்த்வார் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, சிவசங்கர் பாபாவை விமானம் மூலம் சிபிசிஐடி போலீசார் சென்னை அழைத்து வந்தனர். எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் ,இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர். பின்னர், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, கேளம்பாக்கத்தில் உள்ள சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியில் சிபிசிஐடி போலீசார் 6 மணி நேரத்திற்கு மேல் சோதனை செய்து, விசாரணை மேற்கொண்டனர். சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் சுஷில் ஹரி பள்ளியை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

சென்னையை அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சிவசங்கர் பாபாவின் சுசில் ஹரி இன்டர்நேஷ்னல் பள்ளியில் சிபிசிஐடி போலீசார் 6 மணி நேரம் விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து 6 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் சிவசங்கர் பாபாவின் அறை, பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்ததில் லேப்டாப், கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரு அறையில் சீல் வைத்ததாக தெரிவந்துள்ளது.

மேலும் பள்ளி வளாகத்திற்குள் இருந்த ஊழியர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை மேற்கொண்டதாக தெரியவந்தது. மேலும் முக்கிய ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்ததாக தெரியவந்துள்ளது.

சிபிசிஐடி அதிகாரிகள் பள்ளியில் விசாரணை செய்ய வந்தபோது அங்கு வந்த புதுப்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரி பொன்னுதுரை, மாம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள் பள்ளி வளாகத்தை அளவீடு செய்தனர். சரியாக 6 மணி நேர விசாரணைக்கு பிறகு பள்ளியை விட்டு சிபிசிஐடி போலீசார் 5 பேர் வெளியேறினர்.

Advertisement:

Related posts

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு: கண்காணிப்புக் குழு அமைக்கக் கனிமொழி வலியுறுத்தல்!

Halley karthi

கருத்துக் கணிப்பு முடிவுகள்: கேரளாவில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

Gayathri Venkatesan

கோயில்களில் பெண்களும் அர்ச்சகராகலாம்!

Gayathri Venkatesan