அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழு தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரல் 11ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. சூரப்பான மீதான 280 கோடி ரூபாய் ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், அது குறித்து தமிழக அரசு கலையரசன் குழு என்ற விசாரணை கமிஷனை நியமித்து விசாரித்து வருகிறது. சூரப்பா மீதான புகார்களில் முகாந்திரம் உள்ளது என்றும், சூரப்பா நேர்மையானவர் என்று பல்கலைக் கழக நிர்வாகிகள் கூறுவது உண்மையல்ல எனவும் கலையரசன் குழு ஏற்கனவே தெரிவித்துள்ளது.
சூரப்பா மீதான முறைகேடு குறித்து விசாரணை 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது என விசாரணை ஆணைய அதிகாரி கலையரசன் தெரிவித்துள்ளார். இன்னும் 3 முதல் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ள நிலையில், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என கூறியுள்ளார். மேலும், சூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பி அவருடைய விளக்கத்தை பெறவுள்ளதாக கூறிய ஆணையர் கலையரசன், உரிய விளக்கம் அளிக்காவிட்டால் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.







