இலங்கையுடன் முதல் ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கிறார் தவான்

இலங்கை கிரிக்கெட் அணியுடன் நாளை நடக்க இருக்கும் போட்டியில், ஷிகர் தவான் புதிய மைல்கல்லை எட்ட இருக்கிறார். ஷிகர் தவான் தலைமையிலான இந்திய 2-ம் தர கிரிக்கெட் அணி, இலங்கை சென்றுள்ளது. அங்கு மூன்று…

இலங்கை கிரிக்கெட் அணியுடன் நாளை நடக்க இருக்கும் போட்டியில், ஷிகர் தவான் புதிய மைல்கல்லை எட்ட இருக்கிறார்.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய 2-ம் தர கிரிக்கெட் அணி, இலங்கை சென்றுள்ளது. அங்கு மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி- 20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. முதல் ஒரு நாள் போட்டி, கடந்த 13 ஆம் தேதி தொடங்க இருந்தது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய இலங்கை அணியில், பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் உட்பட 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், இந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டு, நாளை ஆரம்பமாகிறது.

இதற்கான இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக, தற்போதைய கேப்டன் குசல் பெரேரா விலகியுள்ளார். புதிய கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 4 வருடங்களில் நியமிக்கப்பட்டுள்ள 10 வது கேப்டன் இவர்.

இந்தத் தொடருக்காக, இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் ஷிகர் தவான் சில சாதனைகளை நிகழ்த்த இருக்கிறார். இப்போது, ஒரு நாள் போட்டிகளில் தவான் 5,977 ரன்களை எடுத்துள்ளார். இவர் நாளைய போட்டியில் 23 ரன்களை எடுத்தால், ஆறாயிரம் ரன்களை எடுத்த 10 வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

தவான் 140 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்ட இருக்கிறார். இந்த ரன்களை, குறைந்த இன்னிங்ஸில் பெற்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இவருக்கு முன் விராத் கோலி 136 இன்னிங்ஸிலும் சவுரவ் கங்குலி 147 இன்னிங்ஸிலும் ஆறாயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர்.

சர்வதேச அளவில், ஆறாயிரம் ரன்களை விரைவாக எடுத்த நான்காவது வீரர் என்ற பெருமையையும் தவான் பெற இருக்கிறார். அவருக்கு முன் ஹாசிம் அம்லா (123 இன்னிங்ஸ்), கோலி (136 இன்னிங்ஸ்), நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் (139 இன்னிங்ஸ்) ஆகியோர் விரைவாக இந்த ரன்களை எட்டியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.