ஆட்சியில் அமர்ந்தது முதல், அதிரடியான பல முடிவுகளையும், திட்டங்களையும் அறிவித்து, தமிழ்நாடு மக்கள் மனதில் இடம்பிடித்தது மட்டுமல்லாது, தொடர்ந்து மாநில பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வந்ததன் மூலம் தேசிய தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தற்போது, அவரது பணிகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்ற பெயரை பெற்றுள்ளார். ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கான சிறப்பு நுண்ணறிவு ஆலோசனை நிறுவனமான ஆர்மேக்ஸ் மீடியா, இந்தியா முழுவதும் கலைத்துறை, அச்சு ஊடகம், வானொலி, சமூகம், அரசியல் என பலத்துறைகளை ஆய்வு செய்து, அத்துறையில் சிறந்தவர்கள் யார் யார் என்ற பட்டியலை மாதந்தோறும் வெளியிடுகிறது.
இந்நிறுவனம் தற்போது, மக்கள் மனதை கவர்ந்த முதலமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 68 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மே மாதத்தில் 62 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்த மு.க.ஸ்டாலின், தற்போது 6 புள்ளிகள் அதிகரித்து, ஜூன் மாத பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 67 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் 63 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இப்பட்டியளில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியா முழுவதும், இந்த தரவு சேகரிப்பு முற்றிலும் தொலைபேசி மூலமாக நடத்தப்பட்டதாக ஆர்மேக்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.
மக்களின் நன்மதிப்பை பெற்ற முதலமைச்சர்களில் மு.க.ஸ்டாலின் முதலிடத்தை பெற பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மே மாதம் 7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், மக்களை கவரும் வகையில் அவர்களது தேவைகளை அறிந்து அடுத்தடுத்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
கொரோனா பாதிப்புகளை ஈடுகட்ட ரூ 4,000, ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கும், திருநங்கைகளுக்கும் பேருந்துகளில் இலவச பயணம், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம் என 5 கோப்புகளில் முதலில் கையெழுத்தையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.
இதன்பின் தற்போது வரை கொரோனா பரவல் கட்டுப்பாடு, துறைகளில் நேரடி கண்காணிப்பு, மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் என மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி புரிந்து வருவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பெற, இதுவே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.








