திருச்சி அருகே ஆடு திருடர்களை பிடிக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரை, திருட்டு கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன், நேற்று இரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். நவல்பட்டு ரோட்டில் மூன்று பைக்குகளில் ஆடுகளுடன் வந்த நபர்களை தடுத்து நிறுத்திய போது அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, ஆடு திருடும் கும்பல் என்பதை அறிந்து அவர்களை பிடிக்க துரத்தி சென்றுள்ளார். திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலையிலுள்ள முகாம்பிகை கல்லூரிக்கு அருகே பள்ளத்துப்பட்டி பகுதியில் பைக்கில் வந்தவரை பிடித்து தடுத்து நிறுத்தியுள்ளார்.
அதிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி டி.ஐ.ஜி சரவண சுந்தர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








