உத்தர பிரதேசத்தில் உள்ள பாக்பத் பகுதியில் அமைந்துள்ள மயான பூமியில் இறந்த சடலங்கள் மேல் போர்த்தப்படும் ஆடைகளைத் திருடியதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா நோய் தொற்று காரணமாக உத்தர பிரதேசத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் அங்குள்ள மயான பூமியில் தினமும் உடல்கள் அடக்கம் செய்யவும், எரியூட்டவும் கொண்டுவரப்படுகிறது.
அவ்வாறு கொண்டுவரப்படும் உடல்கள் மீது போர்த்தப்பட்டு இருக்கும் போர்வைகள், புடவைகள், குர்தா உள்ளிட்ட ஆடைகளை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கடந்த 10 வருடங்களாகத் திருடி வந்துள்ளனர். இப்படி திருடும் ஆடைகளை அவர்கள் நன்றாகச் சலவைச் செய்து, இஸ்திரி போட்டு புதிய துணிகளைப் போல் மீண்டும் ‘குவாலியர்’ என்ற நிறுவனத்தின் பெயரில் விற்பனைச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 520 படுக்கை வரிப்புகள், 127 குர்தா, 52 வெள்ளை நிற புடவைகள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
சடலங்கள் மேல் போர்த்தப்படும் ஆடைகளைத் திருடுவதற்காக சில துணி நிறுவனங்களும் அவர்களுக்கு தினமும் ரூ.300 வழங்கியுள்ளனர். இவர்கள் சலவை செய்து கொண்டு வரும் ஆடைகள் இந்த நிறுவனத்தினர் வாங்கிகொண்டு மீண்டும் விற்பனைச் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது திருட்டு வழக்கு மட்டுமல்லாது கொரோனா பெருந்தொற்று கால சட்டத்தின் அடிப்படையிலும் வழக்குபதிவுச் செய்யப்பட்டுள்ளது.







