தமிழக காவல்துறை சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. யார் இந்த ஏடிஜிபி சங்கர்? அதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
1996ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான சங்கர், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர். பி.டெக் மெக்கானிக்கல் என்ஜினியரிங் சென்னை ஐஐடியில் படித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி, பெங்காலி ஆகிய 5 மொழிகளை அறிந்தவர். ஏஎஸ்பியாக சிவகாசியில் காவல்துறை பணியை தொடங்கிய சங்கர், துணை ஆணையராக பதவி உயர்வு கிடைத்த பிறகு, கோவை நகர துணை ஆணையராக மாற்றப்பட்டு பணியாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் பிறகு எஸ்பியாக புதுக்கோட்டை, நீலகிரி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு, கரூர் மாவட்டம் ஆகியவற்றில் திறமையாக பணியாற்றியதற்கு பாராட்டைப் பெற்றார். 2007ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை கொல்கத்தாவில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவில் மண்டல இயக்குனராக பணியாற்றி உள்ளார். 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை சென்னை காவல்துறை இணை ஆணையராக இருந்துள்ளார்.
இதையடுத்து மேற்கு மண்டல ஐஜியாகவும், 2016ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சென்னையில் கூடுதல் ஆணையராகவும், 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை சேலம் காவல் ஆணையராகவும் சங்கர் திறம்பட பணியாற்றி உள்ளார். 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை காவல்துறையின் முக்கிய பொறுப்பான சிபிசிஐடியின் ஐஜியாவும், 2021ஆம் ஆண்டு வடக்கு மண்டல ஐஜியாகவும் பணியாற்றி உள்ளார். தற்போது நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாக இருந்து வரும் சங்கர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஏடிஜிபி சங்கர் 2011ஆம் ஆண்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் சிறந்த பணிக்காக பதக்கம், 2012ஆம் ஆண்டு காவல்துறையில் சிறந்த பணி செய்ததற்காக குடியரசு தலைவர் பதக்கம், 2020ஆம் ஆண்டு சிறந்த மக்கள் சேவை செய்ததற்காக முதல்வர் பதக்கம், 2022ஆம் ஆண்டு சிறந்த பணிக்காக குடியரசு தலைவருக்கான பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
தற்போது தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு மாநிலத்தின் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் இன்னும் பலப்படுத்த வேண்டிய முக்கிய தருணத்தில் தான் சங்கர் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.