“மேற்கு வங்கத்தில் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தை அமைக்க பாஜகவுக்கு வாய்ப்பு அளியுங்கள்” – பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தை அமைக்க பாஜகவுக்கு வாய்ப்பு அளியுங்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள தாஹேர்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார். ஆனால் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை. அதன்பின், பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது. தொடர்ந்து, அவர் மாநாட்டுத் திடலில் காத்திருந்தவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது,

“பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. இப்போது மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் காட்டு ராஜ்ஜியத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். ஊடுருவல்காரர்களை அடையாளம் காண உதவும் எஸ்.ஐ.ஆரை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கிறது. ஊடுருவல்காரர்கள் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவில் உள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்னையும், பாஜகவையும் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்க்கட்டும், பேசட்டும். ஆனால் மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்கக்கூடாது. பின்தங்கிய, மேற்கு வங்கத்தின் தொலைதூர பகுதிகளுக்கு நவீன வசதிகளை உறுதி செய்வதே எங்களின் நோக்கம். இங்கு வளர்ச்சியைக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். மாநிலத்தில் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தை அமைக்க பாஜகவுக்கு வாய்ப்பு அளியுங்கள்”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.