“தமிழகத்திற்கு அவமானம்!” – தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை முறையாகச் செயல்படுத்தத் தவறியதாகக் கூறி தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

உச்சநீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும்!

“திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவினை அரசு செயல்படுத்த வேண்டும் என்று நான் ஏற்கனவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த அரசிற்கு அறிவுரையாக கூறியிருந்தேன்.

தமிழக வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வு!

அதேபோல் இன்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், தமிழக வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக திருப்பரங்குண்றம் மலைப் பகுதியின் பாதுகாப்பை சி.ஆர்.பி.எப்-வசம் ஒப்படைத்துள்ளது. அறங்காவலர் குழுவையே கலைத்து, திருப்பரங்குன்றம் திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளது.

உச்சநீதிமன்றம் பயன்படுத்திய கடுமையான வார்த்தைகள்!

உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ள சில சொற்களை நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்- “Administrative Chaos, brazen and wilful disobedience, flagrant disregard, calculated affront of both Constitutional Courts” மேலும், “The prevailing situation needed to be dealt with an iron hand, failing which it could lead to CONSTITUTIONAL CHAOS” என்று கூறியுள்ளது. இதுபோன்ற வார்த்தைகளை ஒரு அரசு நோக்கி இவ்வளவு காட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை.

தமிழகத்திற்கு அவமானம் – தவெக அரசுக்கு கண்டனம்!

இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்திற்கு தேவையா? தமிழக சட்டத்துறைக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ள ஆச்சரியக்குறி தவெக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் அறிவுரை!

சட்டம், அரசியலமைப்பு, உச்சநீதிமன்றம்- இவையெல்லாம் மாண்புக்குரியவை. அவை நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் Windmill, Car பொம்மைகளைப் போல அல்ல என்பதை முதல்வர் விஜய் உணரவேண்டும். இனியாவது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண இந்த வாடகைக்கால் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.