தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தமிழக அரசு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வேண்டுமென்றே மீறியுள்ளதாக உச்சநீதிமன்றம் முதற்கட்டமாகக் கருதியது. கடந்த நவம்பர் 20-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், கார்த்திகை தீபத்திருநாளான நவம்பர் 24-ம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த இடத்தில் தீபம் ஏற்றப்படாமல் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக்கள் மீதான விசாரணை னவம்பர் 27 – வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விசாரணையின் முடிவில், நவம்பர் 28-ம் தேதியான இன்று தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.
தமிழக அரசு மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி!
முந்தைய உத்தரவைச் செயல்படுத்தாத தமிழக அரசு மற்றும் கோயில் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவை வெளிப்படையாகவும், வேண்டுமென்றே மீறியிருப்பதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், இதுபோன்ற நடவடிக்கைகள் அரசியலமைப்பு ரீதியான குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்தனர். மேலும், இதுபோன்ற விவகாரங்களில் இனியும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
கோயில், தர்காவுக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இருந்து குறைந்தபட்சம் 50 மீட்டர் தொலைவில் தர்கா அமைந்துள்ள நிலையில், குறிப்பிட்ட இடத்தில் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கோயில் மற்றும் தர்கா ஆகிய இரு இடங்களுக்கும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. அத்துடன், கோயில் அறங்காவலர் குழுவின் செயல்பாடுகளை இடைநிறுத்தி, கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்கவும், நீதிமன்ற உத்தரவு முறையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற இரண்டு நீதிபதிகளைப் பொறுப்பாளர்களாக நியமித்தது.
அரசியல் தலைமையின் உத்தரவின்படி அதிகாரிகள் செயல்பட்டனரா? – உச்சநீதிமன்றம் கேள்வி!
இந்த உத்தரவைப் பிறப்பித்தபோது, அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதில் அரசியல் தலையீடு இருந்திருக்கக்கூடும் என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இது தொடர்பாக நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:
“இந்த வழக்கில் இதுவரை நடந்துள்ள நிகழ்வுகளின் தொடர், நிர்வாக அதிகாரிகள் தங்களது அரசியல் தலைமையின் உத்தரவுகளின்படி செயல்பட்டிருப்பதைக் காட்டுகிறது. நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பாற்றுவதற்கும், நீதித்துறை நிர்வாகத்தின் தூய்மையைப் பராமரிப்பதற்கும் இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.” மேலும், நீதிமன்ற உத்தரவுகள் மீறப்படும்போது நீதித்துறை அமைதியாக இருக்க முடியாது என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 129-வது பிரிவின்கீழ் உச்சநீதிமன்றத்திற்கு உரிய அதிகாரங்கள் உள்ளன என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி பதிவு!
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மீண்டும் தீபம் ஏற்ற உத்தரவிட்டதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில், “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” என்று குறிப்பிட்டுள்ளார்.




