கிரிக்கெட் அணிக்கு தேர்வு: பொருளாதார உதவி கேட்கும் மாற்றுத்திறனாளி வீரர்

சிவகங்கை அருகே ஈசனூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் லிங்கராஜா,   மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட தேர்வாகியுள்ளார். ஆனால் அதில் பங்கேற்க போதுமான பொருளாதாரம் இல்லாததால் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார். சிவகங்கையை…

சிவகங்கை அருகே ஈசனூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் லிங்கராஜா,   மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட தேர்வாகியுள்ளார். ஆனால் அதில் பங்கேற்க போதுமான பொருளாதாரம் இல்லாததால் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்.

சிவகங்கையை அடுத்துள்ள ஈசனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாக்கியம், புஷ்பம் தம்பதியர். இவர்களுக்கு இரு மகள்களும், இரு மகன்களும் உள்ளனர்.  பாக்கியம் கிராம கோவில் பூசாரியாக வேலை செய்து அதில் வரும் சொற்ப வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்திவருகிறார். இவரது கடைசி மகன் லிங்கராஜா சிறுபிள்ளையாக இருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் வலது கை பாதிக்கப்பட்டது. அப்போதும் மனம்தளராத லிங்கராஜா தற்போது பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவருக்கு சிறுவயது முதலே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் அதிகம் என்பதால் நண்பர்களுடன் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று தன்னுடைய ஊனத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடி ஒவ்வொரு மேட்சிலும் ஒப்பன் பேட்ஸ்மேனாக களமிறங்கி ரன்களை குவிப்பது வழக்கம். கிரிக்கெட்  போட்டிகளில் விளையாடி ரன்களை மட்டும் குவிக்காமல் பந்து வீச்சிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இடது கையை மட்டுமே பயன்படுத்தி இவர் வீசிய பந்தில் ஏராளமான விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.மேலும் பீல்டிங் செய்வதிலும் சிறப்பாக விளங்கியதால் இவரை இவரது நண்பர்கள் ஆல் ரவுண்டர் என்றே அழைப்பது வழக்கம். இதேபோல் தனது கிரிக்கெட் விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி வந்த நிலையில்தான் இவருக்கும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி மற்றும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கிடைத்து அங்கேயும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவரது குடும்பம்  வறுமை மிகுந்த குடும்பம் என்பதால் இவர் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு சென்று போட்டிகளில் பங்கேற்று விளையாட இவரது நண்பர்களே பொருளாதர ரீதியில் உதவியுள்ளனர். இவ்வாறு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தன்னுடைய திறமைகளை காட்டிவந்த
லிங்கராஜாவிற்கும் தற்சமயம் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய அணியில் பங்கேற்று விளையாட மாற்றுத்திறனாளிகளுக்கான  இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு தேர்வு செய்து, அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதம் 2 நாட்கள் நடைபெறவுள்ள ரஞ்சி போட்டியிலும், 24 ஆம் தேதி வாரணாசியில் நடைபெறும் போட்டியிலும் 26 முதல் 28 ஆம் தேதி வரை லக்னோவில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் விளையாட இவர் தேர்வாகியுள்ளார். மேலும் இவருடன் சேர்ந்த தமிழகத்தை சேர்ந்த மதுரை ராஜேஸ், திருப்பூர் மணிவண்ணன் என்பவரும் தேர்வாகியுள்ளனர்.மேலும் துபாயில் நடைபெறவுள்ள பி.பி.எல் போட்டியில் பங்கேற்கவும் அழைப்பு வந்துள்ளது.

பொருளாதார உதவி கேட்கும் வீரர்

இந்நிலையில் அந்த போட்டிகள் அனைத்திலும் பங்கேற்க அதிக நிதி தேவை என்பதால் வேலையின்றி உள்ள லிங்கராஜா தவித்து வருகிறார். மேலும் தன்னுடைய நிலை குறித்து எடுத்துக்கூறி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாற்றுத்திறனாளி அலுவலகத்திலும் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். உதவி செய்ய விரும்புபவர்களுக்கு..
A/c Holder name: Lingaraja.p
A/c number:5663101003766
IFSC Code :CNRB0005663
Mobile number:+919047508430

இதுபோல மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் தனது திறமையை காட்டி வரும்  லிங்கராஜாவிற்கு தமிழக அரசும் விளையாட்டுத்துறையும் உதவ முன் வந்தால் உலக அளவில் அவர் வெற்றி பெற முடியும்  என்பதுடன் நமது தமிழகத்திற்கும் பெருமை சேரும் என்பதில் துளியும் ஐயமில்லை.

-சுப்பிரமணியன், செய்தியாளர், சிவகங்கை

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.